திங்கள், 29 மார்ச், 2010

இயற்கை மருத்துவம் - மகரிஷி க.அருணாசலம். 2 அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது?

2
அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது?

மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் சமநிலை தவற இடமிருக்காது. ஆனால் பெரும்பாலோர் இயற்கைக்கு முரணாக வாழ்கின்றனர். எனவே நோயின் பெருக்கம். சூரியனுடன் எழுந்து வேலைகளைக் கவனித்துப் பின் சூரியன் மறையும் போது ஓய்வு கொள்வது இயற்கை வாழ்வு. நல்ல காற்றோட்டம் இல்லாததும் இயற்கை ஒளியும் இல்லாததுமான செயற்கைச் சூழலில் நமது வேலைகள் நடக்கின்றன. நமது நடை, உடை, பாவனைகளும் இயற்கை அன்னையிடமிருந்து நம்மைப் பிரித்து வைப்பனவாகவே உள்ளன. எனவே போதுமான ஆகாயக்கூறு நமது உடலில் இல்லாதபோது வலியும், துன்பமும் ஏற்படுவது இயல்பே.

நமது உணவுப் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் செயற்கை மயமாக ஆகியுள்ளது. தேவையைக் கருதியில்லாமல் நாவின் சுவை கருதிச் சாப்பிடுகின்றோம். பசித்துப் புசிப்பதில்லை. காலம் கருதிச் சாப்பிடுகின்றோம். எந்த உணவு எந்தக் குறைவை நிறைவு செய்யும் என்ற அறிவும் நம்மில் மிகப் பெரும்பாலோருக்கு இல்லை. இயற்கை உணவின் இடத்தை செயற்கை உணவு பிடித்துக் கொண்டுள்ளது. பல தடவைகள் உண்கின்றோம். அவசர அவசரமாக உண்கின்றோம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. புதிய செயற்கைப் பானங்கள் பல பழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றால் உடம்புக்கு வேண்டாத அளவு சிலவகை உணவுகள் சேர்ந்து விடுகின்றது. வேறு சிலவகை இல்லாது போகின்றன. பயன் நோய் நிலை. இதனை நீக்க மருத்துவர்களையும் மருந்துகளையும் நாடுகின்றோம்.

நம்மீது உள்ள கருணையால் திருவள்ளுவர் நோயின்றி வாழ நமக்கு ஒரு எளிய வழி காட்டுகின்றார்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’.

பசித்துப் புசித்தலும் அற்றதறிந்து அருந்துதலும் இயற்கை வழி இயற்கையுடன் இயைந்து வாழவேண்டும் என்பது மருந்தில்லா மருத்துவமாகிய இயற்கை மருத்துவ தத்துவங்களில் அடிப்படையானது. இதனை அறிந்து கடைப்பிடித்தால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

உடலில் பஞ்சபூதங்களின் சேர்க்கை அதனதன் விகிதாச்சாரப்படி சமநிலையில் இருக்கும்போது நமது உடம்பு இருப்பதே நமக்குத் தெரியாது. சமநிலை தவறும் போதுதான் கையோ, காலோ, மூக்கோ, மார்போ இருப்பது நமக்குத் தோன்றுகிறது. இது ஆரோக்கியம் குறைந்த நிலை. ஆரோக்கியமாக இருக்கும் மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருப்பான். இதைத்தான் அன்றாட வாழ்க்கையில் நாம் இயற்கை விதிகளுக்கு முரணான பழக்கவழக்கங்களிலும், செயல்களிலும், சிந்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதனால் துன்பம் ஏற்படுகின்றது. இக்கோணல் வழியிலிருந்து திரும்பி நேர்மையான இயற்கை வழியில் சிக்கலற்ற எளிமையான பாதையில் செல்லும் இயற்கை வாழ்வின் ரகசியத்தைக் காட்டுவதே இயற்கை மருத்துவத்தின் குறிக்கோளாகும்.

(இன்னும் வரும்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக