வெள்ளி, 20 ஜனவரி, 2012

14. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் - அனுபவப் பகிர்வுகள்.

நான்காம் நாள் நிகழ்வுகள்-29-12-2011
வியாழக்கிழமை (நண்பகல்/பிற்பகல்)

அருவியில் ஆசைதீரக் குளித்து விட்டு திரும்பி கோவிலுக்கு வந்ததும் பூசை சிறப்பாக நடைபெற்றது.அன்பர்கள் கூடி நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்கள். எனது மொபைலில் இருந்து சிவபுராணத்தை இசைத்தேன். காட்டுக்குள் இருந்த கோவிலில் நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று சிவபுராணம் இசைக்க எனக்கு கிடைத்த வாய்ப்பினை எண்ணி மகிழ்ந்தேன். அனைவரும் உணவுண்ண அமர்ந்தார்கள். இலைகள் போடப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. பழங்கள், இனிப்பு அவல் அதனுடன் சர்க்கரை பொங்கலும், தக்காளி சாதமும் வழங்கப்பட்டது. உணவருந்து முன்னர் பிரார்த்தனை செய்து முடித்ததும் உணவு உண்ணத் தயாரானார்கள். 

சமைத்த உணவைப் பார்த்ததும் எல்லோரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துத் தயங்கியதைக் கண்டு நான் உடனே நேற்றிரவு முகாமில் இருந்து திரும்பிய போதே இயற்கை நலவாழ்வியல் முகாம் நிறைவு பெற்று விட்டது என்று அறிவித்தேன். 

அதைக் கேட்டு தெளிவடைந்து, முகாம் வந்த நாளில் இருந்து சமைத்த உணவை சாப்பிடாமல் இருந்த அன்பர்கள் ஆர்வத்துடன் பிரசாதத்தை விரும்பி ருசித்து மீண்டும் பலமுறை கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள் நானும், பிரேமும் அவற்றை இறையருட் பிரசாதமாக ஒரு கை வாங்கி அருந்தினோம்.  

 திருமதி யுடன் திரு பாஸ்கர் (பி.எஸ்.என்.எல்)

 உணவுண்ணுமுன் பிரார்த்தனையில் நாகராஜன், 
சென்னை பாஸ்கர், குடந்தை ரமேஷ்.

பிரியா விடை பெறுகிறோம். 

 பூசாரி அவரது மனைவி மற்றும் காட்டைக் கடக்க  உதவி செய்தோருடன் 

கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்த பின்னர், பூசாரி, அவரது மனைவி, வழிகாட்டிவந்த பெரியவர் அனைவருக்கும் நன்றி சொல்லி வணங்கி மரியாதை செய்தோம். பின்னர் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து திரும்பினோம். அணைக்கட்டுக்கு நாங்கள் சென்றபோது அப்போது தான் பழனி செல்லும் பஸ் புறப்பட்டு போயிருந்ததாக அறிந்தோம்.

உடனே உள்ளூர் அன்பர்கள் ஒரு மினி லாரியை ஏற்பாடு செய்து அதில் அனைவரும் ஏறி செல்லும் வழியில் ஒரு அன்பர் வீட்டில் நிறுத்தி இளநீர் அருந்த ஏற்பாடு செய்தார்கள். பின்னர் பாப்பம்பட்டி சந்திப்பில் இறங்கி உதவி புரிந்த அன்பர்களுக்கு மனதார நன்றி சொல்லி பழநிக்குச் செல்லும் பஸ்சில் ஏறி மாலை ஆறுமணி அளவுக்கு யோகாசாரியாவின் வீட்டை அடைந்தோம். 

அந்தக் களைப்பிலும் பழனி மலைக் கோவிலுக்குச் செல்லவிரும்பிய அன்பர் பன்னீர்செல்வம் ஐயாவுக்கு சிறப்பு அனுமதி நுழைவுச் சீட்டை யோகாசாரியா தந்தனுப்பினார்.கூட்டமாக இருக்குமோ நேரம் ஆகுமோ என்று நாங்கள் அவரைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க அவரோ வி.ஐ.பி வரிசையில் அனுமதிக்கப்பட்டு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி அருள்மிகு பழநியாண்டவரின் திருத்தரிசனம் கண்டு வணங்கி அகமகிழ்வுடன் திரும்பி வந்து எங்களுக்கு பிரசாதங்களை அளித்தார். 

கால்களும், உடலும் வெகுவாகவே தளர்ந்து போயிருந்த நிலையில் நான் யோகப் பயிற்சி மையத்திலேயே ஓய்வெடுக்க விரும்பினேன். நாளை காலை நிகழ்வாக அடிகளாரின் இருப்பிடத்தில் சுவாமி அபிஷேகம், பூசை நிகழவிருப்பதால் அதில் எங்களை கலந்து கொள்ள அடிகளார் எங்களை அழைத்திருந்தார். காலையில் முன்னதாகவே எழுந்து குளித்து விட்டு ஆறரை மணிக்கு அங்கே செல்ல வேண்டும் என்று தீர்மானமானது. முழு நாள் ஓய்வின்றி காட்டுப் பகுதிகள் சுற்றித் திரிந்து அருவியில் குளித்து விட்டு வந்திருந்த நாங்கள் இரவு உணவாக கொஞ்சம் பழங்களை உண்டு உடனே உறங்கிப் போனோம். 
(பகிர்தல் தொடரும்)
அடுத்து வருவது ஐந்தாம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சிகள்.

2 கருத்துகள்:

Iniyan சொன்னது…

Excellent & Thrilling Experience! I really do not dare such visits unless someone guarantee the journey is 100% safe. May be If I would have been there my expectations on safety (ie 100%) rather fear factor could have come down !! Is it true that a statement made in between that the camp is already over on 3rd day itself ? If it is, then I too have successfully completed the nature food camp. Right! ok. Waiting for the final day events eagerly. - Iniyan

Ashwin Ji சொன்னது…

அன்பிற்கினியன்,
பாராட்டுக்கு நன்றி.

1. நான் அமர்நாத் யாத்திரை சென்று வந்த போது இருந்த த்ரில்லை/ரிஸ்கை விட இது மிக மிக கம்மிதான். ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். உள்ளூர்க்காரர்கள் வழிகாட்டி, துணை நின்றார்கள் என்பதால் பயம் எல்லாம் ஒன்றும் இல்லை.

2. முகாமை விட்டு வெளியேறி நகருக்குள் வந்தவுடனேயே முகாம் நிறைவடைந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் அறிவித்தமைக்கு காரணம் சமைத்த உணவு பரிமாறப்பட்டு விட்டது. அன்பர்களுக்கு தயக்கம் இருக்கக் கூடாதே என்பதற்காக நான் சொன்னது நகைச்சுவையாகத் தான். ஆனா அதை எல்லாரும் சீரியஸா எடுத்துக்கிட்டாங்க.

என் பகிர்தலில் மீதியை ஒன்றிரண்டு இடுகைகளில் முடித்து விடுவேன்.
அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக