ஞாயிறு, 22 ஜனவரி, 2012

16. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் முகாம் - அனுபவப் பகிர்வுகள்.

ஐந்தாம் நாள் நிகழ்வுகள்-30-12-2011
வெள்ளிக்கிழமை (முற்பகல்/நண்பகல்/பிற்பகல்/மாலை)

முற்பகல் பத்து மணிக்கு யோகா மையத்தில் அடிகளாரும், தமிழ்நாடு இரும்பு வணிக உரிமையாளர் ஆன்மீகப் புரவலர் திரு.மணி அவர்களும், வைணவச் செம்மல் செல்வராஜ் (ஓய்வு பெற்ற ஆசிரியர், பழனி நகரில் உள்ள பெருமாள் கோவிலில் அருட்பணி ஆற்றுபவர்), பி.எஸ்.என்.எல் பாஸ்கர் போன்றோர்  வந்திருந்தார்கள். நிறைவு நாள் வைபவமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. 


 விருந்தினர், திரு.பிரேம்குமார், குடந்தை ரமேஷ். 

 யோகாசாரியா முருகன், திரு.மணி, சீர்-வளர்-சீர் மெய்த்தவ அடிகளார், 
வைணவச் செம்மல் திரு.செல்வராஜ்.

திரு.மணி அவர்கள் அடிகளாருக்கு மரியாதை செய்கிறார்.

 அடிகளார் வைணவச் செம்மலை வணங்குகிறார்.


ஆன்மீகப் புரவலர் திரு.மணி அவர்கள் உரையாற்றுகிறார்.

 அடிகளாரின் அருளாசி.

 யோகா முருகன், டாக்டர் பேச்சிமுத்து, திரு.மணி, 

வைணவச் செம்மல் திரு.செல்வராஜ்.

ஹரிஹரன், நாகராஜன், பாஸ்கர். 

 வைணவச் செம்மலின் பாடல்களை 
ஆர்வத்துடன் அனைவரும் கேட்கிறார்கள். 

முகாம் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் யோகாச்சார்யா முருகன்ஜி வரவேற்புறை ஆற்றினார். வைணவச்செம்மல் பெரியவர் திரு.செல்வராஜ் அவர்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருவாய்மொழி, ஆண்டாள் திருப்பாவை போன்ற வைணவப் பாடல்களை இனிய குரலில் பாடியதோடு மட்டுமின்றி, தாயுமானவர் பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா போன்ற தொகுப்புகளில் இருந்து பாடல்களைப் பாடி கேட்போர் செவிகளையும், இதயங்களையும் குளிர்வித்தார். முகாம் வெற்றியடைய எல்லாவகையிலும் புரவலாக இருந்து உதவிசெய்த திரு.மணி அவர்கள் அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் துண்டு போர்த்தி கவுரவித்ததோடு மற்றுமின்றி அருள்திரு பழனியாண்டவர் திருக்கோவிலில் இருந்து தருவிக்கப்பட்ட எலுமிச்சம்பழம், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்றவற்றை அடிகளாரின் கரங்களா எங்களுக்கு வழங்கினார். பெரியவர்களின் ஆசிபெற்று வீழ்ந்து வணங்கி அருட்பிரசாதங்களை நாங்கள் மிகுந்த மனநிறைவுடன் பெற்றுக் கொண்டோம்.  நிறைவாக பெருமாள் கோயில் பிரசாதமாக புளிசாதம், சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தந்து திருவாளர் வைணவச் செம்மல் அன்பர்களை எல்லையற்று மகிழ வைத்து மகிழ்ந்தார். அன்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அடிகளாரின் அருளுரைக்குப் பின்னர் முகாம் நிறைவுக்கு வந்தது.  முக்கியஸ்தர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டதும் திருமதி தமிழ்செல்வி எங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டார். காமிராவில் எடுத்த படங்களை குறுவட்டாக மாற்றும் பணியில் நானும், பிரேமும் ஈடுபட்டோம். பக்கத்தில் இருந்த ஒரு ப்ரௌசிங் மையத்துக்கு சென்று அனைத்து படங்களையும் ஒரு டி.வி.டியில் பதிந்தோம்.  பழனியைச் சேர்ந்த அன்பர திரு.செந்தில் எங்களை வந்து சந்தித்தார். கடந்த முறை பழனியில் நடந்த இயற்கை நலவாழ்வு முகாமின் போது எங்களுக்கு பலவிதத்திலும் உதவியாக இருந்தவர். திரு செந்தில் தற்சமயம் சென்னையில் பணிபுரிவதால் பணிமும்முரம் காரணமாக விடுமுறை கிடைக்காமல் முகாமுக்கு அவரால் வர இயலாது போனது. வாரஇறுதி விடுமுறைக்காக பழனி வந்த அவர் எங்களை உடனே வந்து சந்தித்தார். அவரது காரில் பிரேம், நான், நாகராஜன், பாஸ்கர் நால்வரையும் ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் மலை மேல் சுமார் முப்பது கி.மீ. உயரம் வரை எங்களை அழைத்துச் சென்றார். ஆங்காங்கே காரை நிறுத்தி விட்டு இறங்கி இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்தோம். திடீரென மழை வந்து விடவே அருகில் உள்ள ஒரு தேநீர்க்கடையில் ஒதுங்கி தேநீர் அருந்தினோம். பின்னர் திரும்ப பழனி நகருக்கு திரும்பினோம். சென்னைக்குப் புறப்படும் முன்னர் எதிர்பாராத விதமாய் பழைய நண்பரை சந்தித்ததும் கோடை மலையில் ஏறி இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க நேர்ந்தது மேலும் மனமினிக்கும் இனியதொரு நிகழ்வாக அமைந்தது.  

மாலை ஐந்து மணிக்கு மீண்டும் அனைவரும் யோகா மையத்தில் குழுமினோம். இரவு ஏழரை மணிக்கு பேருந்து நிலையம் செல்லவேண்டும் என்பதால் பயணத்தை நிறைவாக்கும் விதமாக முகவரிகள், தொடர்பு எங்களை பரிமாறிக் கொள்ளல், முகாம் கணக்குகளை நேர் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. 

பின்னர் ஒவ்வொருவரும் யோகாச்சாரியாவுக்கு நன்றி தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து விட்டு இரவு உணவாக பழங்களை அருந்தி விட்டு விடை பெற்றோம். எங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி யோகாசாரியா பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். கடந்த ஞாயிறு காலையில் எங்களை வரவேற்க வந்ததில் இருந்து முகாம் வேலைகளிலயே ஓய்வின்றி குடும்பத்தாருடன் கழிக்கும் தனது நேரத்தை முற்றிலும் தியாகம் செய்து எங்களுடனேயே இருந்த முருகன்ஜீக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்தோம். அப்போது மழை இருந்ததால் அவரை பேருந்து நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அவரை தடுத்து விட்டோம். இரவு ஏழு ஐம்பதுக்கு பழனியில் இருந்து சென்னை புறப்படும் அரசுப் பேருந்தில் ஏறி பயணித்து மறுநாள் (31.12.2011-சனிக்கிழமை) காலை சுமார் ஆறரை மணிக்கு சென்னை கோயம்பேடு பஸ் நிறுத்தத்தை அடைந்து நகரப் பேருந்தில் ஏறி ஏழரை மணிக்கு அவரவர் இல்லம் சென்று சேர்ந்தோம். ஒவ்வொருவரும் நலமாய் வீடு வந்த சேர்ந்த செய்திகளை அனைவரும் பகிர்ந்து கொண்டோம். பழனி முருகன்ஜீக்கும், அடிகளாருக்கும் நலமாய் வந்து சேர்ந்த செய்தியை தெரிவித்தோம். புத்தாண்டு நலமாய் வளமாய் மலர் வாழ்த்துக்களை எங்களுக்கும் பரிமாறிக் கொண்டோம்.

மிக அருமையான ஒரு இயற்கை நலவாழ்வியல் நிகழ்வினை அனுபவிக்க கிடைத்த நல்வாய்ப்புக்கு இறைவனுக்கு இதய நன்றியைத் தெரிவிக்கிறேன். உங்களுடன் பகிர்வதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்புக்கும் உங்களது அன்பான ஆதரவுக்கும் எனது நன்றிகள் உரித்தாகின்றன. 

அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரம் பங்கலூருவில் இருந்து குடும்பத்துடன் கலந்து கொண்ட அன்பர் நச்சினார்க்கினியன் தனது  அனுபவங்களை இந்த வலைப்பூவில் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறார். வரும் தொடரில் அதனைப் படித்து மகிழலாம். இளைஞர் இனியன் தம் பெயரை போலவே தமிழில் வல்லவர். இனிய தமிழைப் படித்து மகிழும் ஒரு வாய்ப்பினை வரும் தொடரில் காண்போம்.
(பகிர்தல் தொடரும்)

4 கருத்துகள்:

K. Nagarajan சொன்னது…

அற்புதமான பயண தொகுப்பு. இத்தொகுப்பினை படிக்கும் பொழுது மீண்டும் நேரில் சென்ற அனுபவங்கள் கிட்டியது. மனமார்ந்த நன்றி!
- நாகராஜன் கே.

Ashwin Ji சொன்னது…

நன்றி நாகராஜன்.தெரிந்தோ தெரியாமலோ பல செய்திகளை இந்தத் தொகுப்பில் சொல்லாமல் விட்டிருக்கிறேன். குறிப்புகள் வைத்துக் கொள்ளத் தவறியது ஒரு புறம், சில நிகழ்வுகளின் போது நானும் பிரேமும் முகாம் தொடர்பான பணிகளுக்காக பழனி நகர் சென்று விட்டது மறுபுறம். உங்களது அனுபவப் பகிர்தல்களில் நான் விட்டுவிட்ட சங்கதிகள் வந்தால் நன்றாக இருக்கும்.
அஷ்வின்ஜி.

நிகழ்காலத்தில்... சொன்னது…

முகாம் அனுபவம் இன்னும் தொடரும் என்பது கூடுதல் மகிழ்ச்சி :))

வாழ்த்துகள் அஷ்விஜி உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு...

Ashwin Ji சொன்னது…

பெருமதிப்பிற்குரிய சிவா அவர்களுக்கு,

வாழ்த்திய நல்லிதயத்துக்கு எனது இதயம் தொட்ட நன்றி.

அன்போடு,
அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக