புதன், 4 ஜனவரி, 2012

பகுதி மூன்று: பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

3. பழனி யோகா-ஆன்மீக-இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் - அனுபவப் பகிர்வுகள்

பகுதி மூன்று:

26-12-2011 (திங்கள் கிழமை) முதல் நாள் நிகழ்வுகள். 

என்னுடன் அன்பர்கள் ப்ரேம், பன்னீர்செல்வம் மற்றும் ரமேஷ் அதிகாலை எழுந்து குளித்து தயாராகி சுக்குக் கஷாயம் தயாரித்துக் கொண்டிருக்கையில் மற்ற அன்பர்கள் ஒவ்வொருவராக முகாமுக்கு வந்து சேர்ந்தார்கள். மிகச் சரியாக காலை ஏழு மணிக்கு திருச்செந்தில் சுவாமிகள் ஒரு யாகத்தினை வளர்த்து அருளாசி வழங்கி இந்த முகாமை துவங்கி வைத்தார்கள். இந்த வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதமும், சூடான சுக்கு பானகமும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் புளியமரத்து சேட்டு முகாமில் இருந்து அனைவரும் பழனி நகருக்கு காரிலும், இருசக்கர வாகனங்களிலும் அழைத்து செல்லப்பட்டனர். காலை பத்து மணி அளவில் பழனி நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள சாயிசதன் அரங்கில் முகாம் தொடக்க விழா துவங்கியது.விழாவிற்கு வந்திருந்தோரை யோகாசார்யா முருகன் அவர்கள் வரவேற்று பேசிய பின் பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கேற்றி முகாம் துவக்கி வைக்கப்பட்டது.திரு.சிவகுமார்,(பழனி நகராட்சி ஆணையர்), திரு.ரமேஷ்(உரிமையாளர், கற்பகம் ஜுவல்லரி), அவரது துணைவியார் திருமதி.ரமேஷ்,  திரு.மணி (உரிமையாளர், தமிழ் நாடு இரும்பு வணிகம்) அவர்கள், திருமதி மணி ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று பேசிய பழனி நகராட்சி ஆணையர் திரு சிவகுமார், உடல், மன, ஆன்மீக நலத்தின் சிறப்பம்சங்களைப் பற்றியும்,இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் நலமாக வாழ வேண்டிய கட்டாயத்தைப் பற்றியும், யோகா, ஆன்மிகம், இயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் எவ்வாறு இதற்கு உதவுகின்றன என்பது பற்றி பேசி முகாம் வெற்றியடைய வாழ்த்தினார்.

பிரமுகர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தவத்திரு.திருச்செந்தில் அடிகள் மெய்த்தவம் பற்றி அருளுரை ஆற்றி முகாம் சிறப்பாக அமைய அருளாசி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து 'இயற்கைச் செம்மல்' தஞ்சை கோ.சித்தர் (இயற்கை வேளாண்விஞ்ஞானி) முக்கிய உரையாற்றினார். இன்றைய காலகட்டத்தின் மக்களும், அரசுகளும் இயற்கை நலவாழ்வியல் பற்றி கவலைப்படாமல் தங்கள் உடல்நலம் மட்டுமின்றி, சுற்றுப் புற சூழல்களையும் எந்த அளவுக்கு மாசுபடுத்தி கொண்டிருக்கிறார்கள், மரபணு மாற்றத்தினால் விளைவிக்கப்படும் காய், கனிகளின் தீய அம்சங்கள், மற்றும் இயற்கை உணவின் நன்மைகளைப் பற்றியும், இயற்கை நலவாழ்வியல் பற்றியும் அவர் ஆற்றிய பேருரை விழிப்புணர்வூட்டுவதாக அமைந்தது. பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சித்தர் அனைவரது ஐயங்களுக்கு பதிலளித்தார்.

நன்றி உரைக்குப் பின்னர் தொடக்க விழா நிறைவடைந்தது. மதிய உணவுக்காக அனைவரும் மீண்டும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இயற்கை உணவினை மதிய உணவாக அருந்தியதும் அனைவரும் சற்று நேரம் ஓய்வு எடுத்தோம்.
அடுத்த பதிவு >>>>>
(பகிர்வுகள் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக